கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 2¾ பவுன் சங்கிலி பறிப்பு
கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 2¾ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே உள்ள அனுக்கோடு பூவன்விளை வீடு பகுதியை சேர்ந்தவர் செல்லதம்பி. இவருடைய மனைவி ரோஸ்மேரி (வயது 70). இவர், தனது மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார்.
வல்சலா வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வல்சலா இல்லாத நேரத்தில் ரோஸ்மேரி கடையை கவனித்து கொள்வது வழக்கம்.
நேற்று முன்தினம் மதியம் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையில் இருந்தார். அப்போது, 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ரோஸ்மேரியிடம் வந்து வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டார். ரோஸ்மேரியும் பழத்தை எடுத்து தராசில் வைத்துக் எடை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அந்த நபர் ரோஸ்மேரியின் கழுத்தில் கிடந்த 2¾ பவுன் சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ரோஸ்மேரி, ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த நபர் தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி கூட்டாளியுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரோஸ்மேரி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story