கர்நாடகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்-சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் காரசார விவாதம்


கர்நாடகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்-சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் காரசார விவாதம்
x
தினத்தந்தி 12 March 2022 2:35 AM IST (Updated: 12 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் காரசாரமாக விவாதித்தனர்

பெங்களூரு: கர்நாடகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் காரசாரமாக விவாதித்தனர்.

கண்ணீர் சிந்தினீர்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே போல் கர்நாடகத்தில் பா.ஜனதா 130 முதல் 140 இடங்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்கும். 

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர கனவு காண்கிறது. ஆனால் அக்கட்சி தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும். காங்கிரஸ் இல்லாத பாரதம், காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நோக்கம். இந்திய அளவில் அது தற்போது நடைபெற்று வருகிறது. கர்நாடகத்திலும் காங்கிரஸ் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம்’’ என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.பட்டீல், ‘‘பா.ஜனதாவில் உங்களை முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேற்றி விட்டனர்’’ என்றார். அதற்கு பதிலளித்த எடியூரப்பா, ‘‘என்னை யாரும் வெளியேற்றவில்லை. நானே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். நாங்கள் பசவராஜ் பொம்மையை முதல்-மந்திரி ஆக்கினோம்’’ என்றார். 

அப்போது எதிர்க்கட்சி தலைவா் சித்தராமையா குறுக்கிட்டு, ‘‘எடியூரப்பாவை தேவையின்றி முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினர். நீங்கள் பதவியை ராஜினாமா செய்தபோது கண்ணீர் சிந்தினீர்கள். இதனால் வேதனையில் உள்ள அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதாக கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக எடியூரப்பா கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் பா.ஜனதா தோல்வி அடைந்தது.

ஆதரிக்க வேண்டும்

சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆளும் பா.ஜனதாவை ஆட்சியை விட்டு அகற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர். 5 மாநிலங்களில் பா.ஜனதா 4 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு ஏற்கனவே பா.ஜனதா ஆட்சி தான் நடைபெற்றது. பஞ்சாப்பில் நாங்கள் செய்த தவறால் ஆட்சியை இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் நிலை வேறு. காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் பண்டப்பா காசம்பூர், ‘‘எங்கள் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த பலம் எங்கள் கட்சிக்கு உள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அதனால் மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரிப்பார்கள்’’ என்றார்.

மக்களுக்கு நம்பிக்கை

அதன் பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது, ‘‘எங்களது திட்டங்கள் மற்றும் உழைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் ஆதரவு வழங்கி வருகிறார்கள். 

எடியூரப்பா உள்பட தலைவர்களின் தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என்றார். அடுத்து கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காரசாரமாக விவாதித்தினர்.

Next Story