‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவு நீர்
தாளவாடியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் ராஜப்பா வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 6 மாதங்களாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை வடிகாலை சீரமைக்க வேண்டும். மேலும் கழிவுநீர் தங்குதடையின்றி செல்லவும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாளவாடி.
பழுதடைந்த மின் கம்பம்
விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட புதுவளவு தோட்டம் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தின் அருகில் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் உள்ளது. ஆபத்தான மின்கம்பம் விழுந்தால் பெரிய மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுவளவு.
தெருவிளக்கு ஒளிருமா?
கொடுமுடி காங்கேயம் ரோடு என்.பி. நகரில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள தெருவிளக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
வர்ணம் பூச வேண்டும்
கோபியில் இருந்து சின்னமொடச்சூருக்கு செல்லும் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. அதன் அருகே ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் பிரதிபலிப்பான் தன்மை கொண்ட வர்ணம் பூச வேண்டும்.
பொதுமக்கள், சின்னமொடச்சூர்.
பணி விரைந்து முடிக்கப்படுமா?
ஈரோடு சூளை பஸ் நிலையம் அருகில் ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாக்கடை கால்வாய்க்குள் பலர் விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாய் பணிைய விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.
தார்சாலை அமைக்க வேண்டும்
முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னியம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பாலாஜி கார்டனுக்கும் செல்ல இதுவே முக்கியமான சாலை. இந்த சாலை வழியாக ஏராளமானோர் சென்று வருகிறார்கள். ஆனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதை தாார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்துக்கவுண்டன்பாளையம்.
Related Tags :
Next Story