கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்-மந்திரி சுனில்குமார் நம்பிக்கை
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அடையாளத்தை இழந்துவிட்டது என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்
மங்களூரு:
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அடையாளத்தை இழந்துவிட்டது என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
உற்சாகம் அளிக்கிறது
கர்நாடக மின்சார துறை மந்திரி சுனில்குமார் நேற்று மங்களூருவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மந்திரி சுனில்குமார் கூறியதாவது:-
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதே உற்சாகத்துடன் அடுத்த ஆண்டு (2023) கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அதற்கான சாமர்த்தியம் நம்மிடம் உள்ளது. உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி, நேர்மையான நிர்வாகம், இந்துத்துவா கொள்கை, யோகி மற்றும் மோடியின் புகழ் ஆகியவற்றால் அங்கு பா.ஜனதா தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில மக்களும் பா.ஜனதாவை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். இது பா.ஜனதா மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
அடையாளத்தை இழந்துவிட்டது
எதிர்காலத்தில பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடிப்போம். இந்த தேர்தல் முடிவுகள், அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்பதை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தன் அடையாளத்தை இழந்துவிட்டது.
அந்த கட்சியால் 2 இலக்கங்களை கூட தாண்ட முடியவில்லை. காங்கிரஸ் ஒரு முன்னாள் கட்சியாக மட்டுமே இருக்கும்.
ராகுல்காந்தியின் தலைமையை ஏற்க முடியாது என்பதை மக்கள் இந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story