திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும்; மாவட்ட கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. மனு
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பண்ணாரி எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பண்ணாரி எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளதாவது:-
விவசாய விளைபொருட்கள்
தாளவாடி மலைப்பகுதியில் விளையும் முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய், தர்பூசணி, மக்காச்சோளம், கேழ்வரகு, வாழை, உணவு தானிய வகைகள் உள்பட பல்வேறு விவசாய விளைபொருட்கள் தினந்தோறும் காலை முதல் மாலை வரை அறுவடை செய்யப்பட்டு சுமார் 200 வாகனங்கள் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இதேபோல் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு, மாண்டியா, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் தாளவாடியில் இருந்து இரவு 10 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு எடுத்து செல்லப்படுகிறது. மேலும் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து மல்லிகைப்பூ, சம்பங்கி உள்பட பல்வேறு பூக்களும் இரவில் சத்தியமங்கலம் மலர் சந்தைக்கும், வெளிமாநிலங்களுக்கும் வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது.
ரத்து செய்ய வேண்டும்
திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக பூக்களை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்லாவிட்டால், அது வீணாவதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. அதுமட்டுமின்றி திருமணம் மற்றும் சமுதாய விழாக்களுக்கு பொதுமக்கள் இரவில் வீடு திரும்ப முடியாத நிலையும் உள்ளது. எனவே திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story