சிவகிரி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜினாமா


சிவகிரி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜினாமா
x
தினத்தந்தி 12 March 2022 3:35 AM IST (Updated: 12 March 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி நகர பஞ்சாயத்து, 18 வார்டுகளை கொண்டதாகும். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இங்குள்ள 7 வார்டுகளில் தி.மு.க.வும், மற்ற வார்டுகளில் பிற கட்சியினர், சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக தி.மு.க. கவுன்சிலர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் மதியம் அலுவலகத்தில் வைத்து துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. துணைத்தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சியின் சார்பில் கவுன்சிலர் அருணாசலம் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து கூட்டணி கட்சியான தி.மு.க. கவுன்சிலர் விக்னேஷ் களம் இறங்கினார்.

நடைபெற்ற மறைமுக தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் விக்னேஷ் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் அருணாசலம் 4 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதன் பின்பு விக்னேஷ் துணைத்தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்து விட்டு நேரில் சந்திக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து துணைத்தலைவராக வெற்றி பெற்றிருந்த விக்னேஷ், `எனது குடும்ப சூழ்நிலை காரணமாக துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலுவிடம் வழங்கினார்.
அந்த கடிதத்தை தலைவர் கோமதி சங்கரி, நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.


Next Story