மைனர் பெண்ணை கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய கொடூரம்- ஓசூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது


மைனர் பெண்ணை கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய கொடூரம்- ஓசூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 3:47 AM IST (Updated: 12 March 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தையல் கற்றுக் கொடுப்பதாக கூறி சிறுமியை கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய கொடூரம் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஓசூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெங்களூரு:
பெங்களூருவில் தையல் கற்றுக் கொடுப்பதாக கூறி சிறுமியை கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய கொடூரம் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஓசூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி கற்பழிப்பு

பெங்களூரு பண்டே பாளையா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளாள். அந்த சிறுமிக்கு தையல் கற்றுக் கொடுக்க பெற்றோர் முடிவு செய்தார்கள். இதையடுத்து, பண்டே பாளையாவில் தையல் தொழில் கற்றுக் கொடுக்கும் ராஜேஸ்வரி மற்றும் கலாவதியிடம் சிறுமியை அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து ராஜேஸ்வரியும், கலாவதியும் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் மயக்கம் அடைந்த சிறுமியை கேசவமூர்த்தி என்பவருக்கு அவர்கள் விருந்தாக்கி உள்ளனர். கேசவமூர்த்தி அந்த சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

விபசாரத்தில் தள்ளினர்

இதனால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளாள். இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேஸ்வரியும், கலாவதியும் அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை மேலும் 2 பேர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நடந்த சம்பவங்கள் குறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை விபசாரத்தில் தள்ளிய ராஜேஸ்வரி, கலாவதியை கைது செய்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தையல் கற்று கொடுப்பதாக...

அதாவது ராஜேஸ்வரியும், கலாவதியும் விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக சிறுமிகள், இளம்பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். கொரோனா காலத்தில் முகக்கவசம், கொரோனா தடுப்பு உடைகளை 2 பேரும் தைத்து கொடுத்து வந்துள்ளனர். அதன்பிறகு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும், இவர்களிடம் தையல் கற்று வந்துள்ளனர்.

அதன்படி, தையல் கற்று கொள்ள வந்த சிறுமிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகு, சிறுமியை கேசவமூர்த்தி கற்பழித்துள்ளார். பின்னர் ராஜேஸ்வரி, கலாவதியின் வாடிக்கையாளர்களான ரவீக், சரத் ஆகிய 2 பேரும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. சிறுமியை விபசாரத்தில் தள்ளியதன் மூலம் 2 பேருக்கும் பணம் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக சிறுமியை மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

ஓசூரை சேர்ந்தவர்

இதையடுத்து, ராஜேஸ்வரி, கலாவதி கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு ஓசூரை சேர்ந்த கேசவமூர்த்தி, பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த சத்யராஜ், எலகங்காவை சேர்ந்த சரத், பேகூருவை சேர்ந்த ரபீக் ஆகிய 4 பேரையும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரையும் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த 36 மணிநேரத்தில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான ராஜேஸ்வரி, கலாவதி வேறு எந்த சிறுமியையும் விபசாரத்தில் தள்ளி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 6 பேர் மீதும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story