போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து மூதாட்டியின் நிலம் அபகரிப்பு; தாசில்தார் உள்பட 10 பேர் மீது வழக்கு


போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து மூதாட்டியின் நிலம் அபகரிப்பு; தாசில்தார் உள்பட 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 March 2022 3:58 AM IST (Updated: 12 March 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை அபகரித்து விற்பனை செய்ததாக தாசில்தார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கோலார் தங்கவயல்:
மூதாட்டி உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை அபகரித்து விற்பனை செய்ததாக தாசில்தார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டி

கோலார் மாவட்டம் முல்பாகல் டவுன் வீரபத்ரா நகரில் வசித்து வருபவர் முனேம்மா வெங்கராமையா (வயது 70). இவருக்கு சொந்தமாக முல்பாகல் புறநகரில் 15 குன்டே நிலம் உள்ளது. 

இந்த நிலையில் அதேப்பகுதியை சேர்ந்த எரப்பா என்பவரின் மகன் கிருஷ்ணப்பா என்பவர், மூதாட்டி முனேம்மா உயிருடன் இருக்கும்போதே, அவர் இறந்துவிட்டதாக கூறி போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து முனேம்மாவுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து பாக்கியலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் முனேம்மா அதிர்ச்சி அடைந்தார். 

நிலம் அபகரிப்பு

பின்னர் அவர், இதுகுறித்து கோலார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றிய விசாரணை நடந்து வந்தது. அப்போது, கிருஷ்ணப்பா, மூதாட்டி முனேம்மா இறந்துவிட்டதாக கூறி முல்பாகல் தாசில்தார் அலுவலகத்தில் போலியாக இறப்பு சான்றிதழ் வாங்கி அந்த நிலத்தை அபகரித்து, பாக்கியலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 
இதில், அப்போதைய முல்பாகல் தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் சம்பத்குமார், வருவாய் துறை அதிகாரி சாதக் உல்லா, கிராம கணக்காளர் அரவிந்த் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

10 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து மூதாட்டி நிலத்தை அபகரித்த கிருஷ்ணப்பா, நிலத்தை வாங்கிய பாக்கியலட்சுமி, கிருஷ்ணப்பாவின் மகன்கள் லட்சுமிபதி, ஆனந்தகுமார் மற்றும் சுலோச்சனம்மா, அனுசியம்மா, அப்போதைய தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் சம்பத் குமார், வருவாய் துணை அதிகாரி சாதக் உல்லா, கிராம கணக்காளர் அரவிந்த் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி, முல்பாகல் போலீசார், தாசில்தார் ராஜசேகர் உள்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story