சித்தியை கொன்று நகைகள் கொள்ளை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சித்தியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது
சிக்கமகளூரு:
சித்தியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
குடி பழக்கத்துக்கு அடிமை
தாவணகெரே டவுன் டி.சி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் (வயது 28). இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தீப்குமார் கடனை அடைப்பதற்காக தனது சித்தப்பா பசவராஜப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பசவராஜப்பா பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து பசவராஜப்பாவிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.
கொலை-கொள்ளை
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி பசவராஜப்பாவின் வீட்டுக்கு சந்தீப்குமார் சென்றுள்ளார். அப்போது பசவராஜப்பா வீட்டில் இல்லை. அவரது மனைவி விசாலட்சம்மா (வயது 45) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சித்தி விசாலட்சம்மாவிடமும் சந்தீப்குமார் பணம் கேட்டுள்ளார்.
அவரும் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப்குமார், சித்தி என்றுகூட பார்க்காமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.
இதில் விசாலட்சம்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சந்தீப்குமார், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து தாவணகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தீப்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தாவணகெரே கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தாவணகெரே கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி ஸ்ரீபாத் தீர்ப்பு வழங்கினார். அப்போது சந்தீப்குமார் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story