கடையநல்லூரில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு
கடையநல்லூரில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர்.
கடையநல்லூர்:
திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு மேற்கொண்டது.
இதையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை தாலுகாக்களில் 23 கிராமங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தால் கடையநல்லூர் மேற்கு சாரிகுளம் பாசன பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமான விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அரசு உத்தரவை தொடர்ந்து, இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இந்த வழிச்சாலைக்கு பதிலாக மாற்று வழிச்சாலை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் விதமாக அதிகாரிகள் நிலத்தில் கல் நடவு பணியை மேற்கொண்டனர். அப்போது கடையநல்லூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நில அளவை கல் நடாமல் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story