யூனியன் அலுவலக வாசலில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் போராட்டம்
மானூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி யூனியன் அலுவலக வாசலில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானூர்:
நெல்லை மாவட்டம் மானூரில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. கடந்த ஆண்டு நெல் அறுவடை சீசனில் இந்த கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் அடைந்தனர்.
வழக்கமாக மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களான எட்டான்குளம், களக்குடி, பள்ளமடை, நாஞ்சான்குளம், ரஸ்தா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு பல ஆயிரம் நெல் மூட்டைகளை கொண்டு வருவார்கள்.
இந்த ஆண்டு நெல் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. ஆனால், மானூரில் இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. மேலும், மானூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களக்குடியிலும், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளமடையிலும் புதியதாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. எனவே, மானூரில் ஏற்கனவே இயங்கிய கொள்முதல் நிலையத்தை இந்த ஆண்டு மீண்டும் திறக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி விவசாயிகள் திரண்டனர். பின்னர் மானூருக்கு நெல்லை கொண்டு வந்து யூனியன் அலுவலக வாசலில் கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள், மானூரில் ஏற்கனவே இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மானூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story