சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனை, பூஜை, அபிஷேகம் நடந்தது. பின்பு 9.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் அபிஷேக பூஜையும், மதியம் கும்பாபிஷேக தீபாராதனை பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான வருகிற 18-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இரவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதனை தொடர்ந்து குதிரையில் வன்னிக்குத்து நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதனை தொடர்ந்து குதிரை ஓட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் விஜயா, செயல் அலுவலர் சாலைலட்சுமி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story