தடையை மீறி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்
பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தடையை மீறி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆடி அமாவாசை விழாக்காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பொங்கல் வைப்பது, ஆற்றில் நீராடுவது மற்றும் ஆடுகளை இறைவனுக்கு காணிக்கையாக படைப்பது போன்றவற்றுக்கு வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக அரசு நீக்கிய பிறகும் இந்த கோவிலில மட்டும் பக்தர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது இறைவனுக்கு உணவு தயாரித்து படையலிட்டு வழங்கவும், கோவில் முன்பு உள்ள ஆற்றில் நீராடவும், கிடாவெட்டி படையல் செய்யவும் தொடர்ந்து தடை அமலில் உள்ளது.
இதை கண்டித்து மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பக்தர்கள் திடீரென்று ஒன்று திரண்டு, தடையை மீறி அங்குள்ள ஆற்றில் இறங்கி புனித நீராடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘கோவிலில் விதிக்கப்பட்டு உள்ள தடைகளை முற்றிலும் விலக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.
Related Tags :
Next Story