மகளிர் சுய உதவிகுழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விற்பனை வாய்ப்புகள்
திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் குழுக்களின் மூலமாகவோ அல்லது தங்களது குழுவில் உள்ள உறுப்பினர்கள் மூலமாகவோ பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வாழ்வாதார மேம்பாடு
மகளிர் சுய உதவி குழுவின் தீர்மான நகல், மகளிர் குழு, மகளிர் குழு உறுப்பினர் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி பொருள் குறித்து ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த பதிவுச்சான்று, உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை விலை குறித்த விவரம் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது உற்பத்தி பொருட்களின் விற்பனையை பெருக்கி வாழ்வாதார மேம்பாடு அடைய செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி ஒருங்கிணைந்த வளாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story