ராணுவ பொறியாளர் சேவைதுறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
ராணுவ பொறியாளர் சேவைதுறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்னூர்
தென்பிராந்திய ராணுவ பொறியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மன்மோகன் தலைமை தாங்கினார்.
வெலிங்டன் பேரக்ஸ் கிளை சங்க தலைவர்கள் ரவிக்குமார், திருப்பதி, செயலாளர்கள் விமல், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்க பொதுசெயலாளரும், புதுடெல்லி 3-வது மட்ட ராணுவ சபை உறுப்பினருமான ஏ.திருமலை கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில், ராணுவ பொறியியல் சேவை துறையில் பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உரிய நேரத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ராணுவ பொறியியல் சேவை துறையில் அகில இந்திய அளவில் 90 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறையில் பணிபுரியும் 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மலைப்படி வழங்கப்பட வேண்டும், மலை பிரதேசத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கிளை சங்க துணைத்தலைவர் செல்வம் வரவேற்றார். முடிவில் துர்க்காதேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story