சென்னை தரமணியில் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்


சென்னை தரமணியில் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 March 2022 7:24 PM IST (Updated: 12 March 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தரமணியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாமை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,  

தமிழகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் திரு.வி.க.நகர் மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், தரமணி பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மேயர் பிரியா நேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமையும் அவர் ஆய்வு செய்தார்.

மருத்துவ முகாமில் 30 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் தொடர்ந்து அனைத்து மண்டலத்திலும் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story