ராசிபுரத்தில் பரபரப்பு: சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு-கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை
ராசிபுரத்தில் சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
ராசிபுரம்:
சித்தி விநாயகர் கோவில்
ராசிபுரம் டவுன் வி.நகர்-2 பகுதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் பூசாரி நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு வந்தனர். முகத்தை துணியால் மூடியிருந்த அவர்கள் 2 பேரும் இரும்பு கம்பியால் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் இருந்த உண்டியலின் பூட்டை உடைத்தனர்.
அப்போது திடீரென கோவிலில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனை கேட்டு மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி பதுங்கினர். பின்னர் அலாரம் ஒலி நின்ற பிறகு, யாராவது வருகிறார்களா? என அவர்கள் கண்காணித்தனர். யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்த அவர்கள் 10 நிமிடம் கழித்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.
கண்காணிப்பு கேமரா
தொடர்ந்து உண்டியலில் இருந்த பணத்தை தாங்கள் கொண்டு வந்திருந்த துண்டில் அள்ளி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
காலை அந்த வழியாக சென்றவர்கள் திருட்டு தொடர்பாக ராசிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் உண்டியல் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டதும், இதனால் குறைந்த அளவிலான பணமே உண்டியலில் இருந்ததும் தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிர்ச்சி
ராசிபுரத்தில் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
தற்போது குடியிருப்பு பகுதியில் இருந்த விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் ராசிபுரம் மக்களிடத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் திருடர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story