துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 March 2022 7:56 PM IST (Updated: 12 March 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஞ்சாயத்து சுபாநகரைச் சேர்ந்த பொதுமக்கள் பி.சங்கர நாராயணசாமி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் துணை சூப்பிரண்டு உதயசூரியனிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி சுபாநகரில் ஸ்ரீநித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலை பொதுமக்கள் சேர்ந்து கட்டினோம். மேற்படி கோவிலை தனிநபர் ஒருவரின் குடும்பத்தினர் ஸ்தாபகர் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுசம்பந்தமாக பொதுமக்கள் அனைவரும் கூடி கோவிலை பொதுவாக்க வேண்டுகோள் விடுத்து, அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வராமல், தன் சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பினார். நாங்கள், அந்த பிரதிநிதி மூலமாக போன் செய்து அவரை வருமாறு அழைத்தோம். பின்னர் நாங்கள் அவரது வீட்டுக்கு சென்றபோது, அதற்கு முன்பாக அவரே வீட்டை உடைத்து எங்கள் மீது மேற்கு  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த பொய் புகாரை முறையாக விசாரித்து, கோவிலை பொதுமக்களுக்கு மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story