வீதி உலா வந்த போது மாகாளியம்மன் கோவில் தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு
கோட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வீதி உலா வந்த போது தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பொள்ளாச்சி
கோட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வீதி உலா வந்த போது தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மாகாளியம்மன் கோவில்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் பழனியூர் மகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் தினமும் அம்மன் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 9-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை வரை குண்டம் பூ வளர்க்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் பூ வளர்த்தனர். காலை 6 மணிக்கு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.
தேர் சாய்ந்தது
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க தேர் வீதி உலா வந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதற்கிடையில் சந்தை பேட்டை தேர்வீதியில் வந்த போது திடீரென்று தேர் பக்தர்களின் கட்டுபாட்டை இழந்து ஓடி, அருகில் சாக்கடை கால்வாய்க்குள் சக்கரம் இறங்கியது. இதனால் தேர் முன்புறமாக சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.
இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோட்டூர் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தேரை மீட்டு நிறுத்தினர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தேர் வழக்கம் போல் வீதி உலா சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story