திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கழிவுநீரில் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்


திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கழிவுநீரில் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்
x
தினத்தந்தி 12 March 2022 8:33 PM IST (Updated: 12 March 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கழிவுநீரில் குப்பை தொட்டிகள் வீசப்பட்டன. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை நிரம்பி வழியும் அளவுக்கு தினமும் குப்பைகள் குவிந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, சில இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாததால் சாலையோரங்களில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள், பயன்படுத்தப்படாமல் வீணாகி கொண்டிருப்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.
இதுமட்டுமின்றி நல்லநிலையில் உள்ள குப்பை தொட்டிகளை கழிவுநீரில் வீசி சென்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் 3-வது ரெயில்வே கேட் அருகே குட்டைப்போல கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த கழிவுநீரில், மாநகராட்சிக்கு சொந்தமான 10 குப்பை தொட்டிகள் வீசப்பட்டுள்ளன.
குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தாமல், இப்படி வீணாக கழிவுநீரில் குப்பை தொட்டிகளை வீசியது யார்? என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Next Story