சிகிச்சை பெற்ற பெண் சாவு எதிரொலி தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


சிகிச்சை பெற்ற பெண் சாவு எதிரொலி  தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்   போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 March 2022 8:48 PM IST (Updated: 12 March 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் இறந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனை முன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி வீரழகி (வயது 50). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வீரழகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வீரழகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இதனிடையே நேற்று வீரழகியின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர், வீரழகியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அவரை க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வீரழகி இறந்துவிட்டார். 
சாலைமறியல்
இந்தநிலையில்  தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சை காரணமாக வீரழகி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் கருதினர். இதையடுத்து அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடந்த மறியலால் தேனி-மதுரை சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. மேலும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
போலீஸ் சூப்பிரண்டு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரழகியின் உறவினர்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். 
இதைத்தொடர்ந்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் வீரழகியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். மேலும் சம்பவம் தொடர்பாக க.விலக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வீரழகியின் சாவில் சந்தேகம் உள்ளது என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story