கேரள வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழக விவசாயிகள் கைது


கேரள வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழக விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 12 March 2022 8:55 PM IST (Updated: 12 March 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

கேரள வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்கு மராமத்து பணிகள் செய்ய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தளவாடபொருட்களை ஒரு சரக்கு வேனில் கொண்டு சென்றனர். அப்போது தேக்கடி நுழைவு பகுதியில் உள்ள கேரள வனத்துறை சோதனை சாவடியில் அந்த வேனை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இது தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  லோயர்கேம்ப் அருகே ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் ரஞ்சித், ராஜீவ், மகேஷ், பாரதீயகிசான் விவசாய சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், உள்ளிட்ட விவசாயிகள் கேரள வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது அவர்களிடம் உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயாகுப்தா பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் விவசாயிகள் அதை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். 
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் லாவண்யா, சிலைமணி ஆகியோர் தலைமையில் போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக விவசாயிகள் 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  


Next Story