இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் வீடு தேடி வரும் வருவாய் சான்றிதழ் திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்களை மக்களின் வீடுகளுக்கே அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:
வீடுகளுக்கே ஆவணங்கள்
கர்நாடகாவில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்களை மக்களின் வீடுகளுக்கே இலவசமாக அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படு்ம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நேற்று சிக்பள்ளாப்பூர்(மாவட்டம்) தாலுகா, குக்கிரலஹள்ளி கிராமத்தில் நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு வருவாய் துறை சார்பில் சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வினியோகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழா மேடையில் பேசும்போது கூறியதாவது:-
அரசு சான்றிதழ்கள்
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்று கூறிய அறிவுரையின் படி, கர்நாடகாவில் வறுமையில் உள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் படிப்பு செலவை கர்நாடக அரசே ஏற்க முன்வந்துள்ளது.
கர்நாடகாவில், வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இனி மக்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 55 லட்சம் பேரின் வீடுகளுக்கு அரசு சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படும்.
மக்கள் சேவை தான் முக்கியம்
நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா செயல்படுகிறது. ஆனால், காங்கிரசார் ஆட்சியில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையில் உள்ளனர்.
நாங்கள் சேவை செய்வதை பார்த்து மக்கள் ஆசீர்வதித்து தேர்வு செய்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை விடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் பா.ஜனதாவினர் சேவை செய்வதில்லை. எப்போதும் எங்களுக்கு மக்கள் சேவை தான் முக்கியம்.
ரூ.5 கோடி நிதி
அதேபோல், மாநிலம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55 லட்சம் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை வழங்க கர்நாடக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஜல் சக்தி திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிகக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹாவேரி, கலபுரகியை தொடர்ந்து பால் உற்பத்திக்காக சிட்லகட்டா தாலுகாவில் ரூ.30 கோடி செலவில் பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
10 சதவீதம் கட்டண சலுகை
அதைத்தொடர்ந்து வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக் பேசுகையில் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் 55 லட்சம் பேருக்கு அவரவர்களின் வீடுகளுக்கே அரசு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வருவாய் துறையினர் மக்களுக்கு ஏற்றபடி சேவை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சொத்துக்களுக்கான ஆவணங்களை தேடி அலுவலகங்களுக்கு சென்று அலையவேண்டிய அவசியம் இருக்காது.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் நில அளவீட்டாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 31-ந் தேதிக்குள் ஆவணங்கள் வேண்டி பெயர்களை பதிவு செய்தால் 10 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்ய ரூ.1,135 கோடி நிதி ஒதுக்குவது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story