வனப்பகுதியில் பூத்து குலுங்கும் ‘ஆவாரம்பூ’
கோடியக்கரையில் உள்ள வனப்பகுதியில் ஆவாரம்பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
வேதாரண்யம்:-
கோடியக்கரையில் உள்ள வனப்பகுதியில் ஆவாரம்பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
பசுமை மாறாக காடுகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு மற்றும் கோடியக்கரை ஊராட்சி பகுதிகளில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் உள்ளன. இந்த காட்டில் பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான் உள்ளிட்ட மான் இனங்களும், முயல், நரி, குரங்கு, பல வகையான பாம்புகள், காட்டுப்பன்றி, குதிரை உள்ளிட்ட விலங்குகளும் வசித்து வருகின்றன. ஏராளமான மயில்களும் காட்டை சுற்றி வலம் வருகின்றன.
பறவைகள் சரணாலயத்தில் சீசன் நேரத்தில் விதவிதமான வடிவங்களையும், நிறங்களையும் கொண்ட வெளிநாட்டு பறைவகள் முகாமிடுகின்றன.
ஆவாரம்பூ
மேலும் காட்டுப்பகுதி தொடங்கும் இடமான ராமர் பாதம் பகுதியில் மூலிகைச்செடிகள் உள்ளன. இந்த மூலிகை வனத்தில் வயிற்று வலி, சளி, காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் மூலிகை செடிகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக உதவும் ஆவாரம்பூவும் இங்கு பெருமளவில் உள்ளது. இந்த ஆவாரம்பூக்கள் தற்போது கோடியக்கரை காட்டுப்பகுதி மட்டுமின்றி, அங்கு உள்ள சாலைகளின் இருபுறமும் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் போர்வை போர்த்தியதுபோல பூத்து குலுங்கும் ஆவாரம் பூக்கள் அந்த பகுதியில் செல்வோரின் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் உள்ளன.
Related Tags :
Next Story