ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் ஏரியில் பிணமாக மீட்பு


ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் ஏரியில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 12 March 2022 9:53 PM IST (Updated: 12 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 20). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால், அரவிந்தன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்த அரவிந்தனை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. 

இதுதொடர்பாக பகண்டை கூட்டு ரோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அரவிந்தனை தேடி வந்தனர்.

ஏரியில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை அரியலூர் தாங்கல் ஏரியில் அரவிந்தன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாரும், அரவிந்தன் குடும்பத்தினரும் தாங்கல் ஏரிக்கு சென்று பார்த்தனர். மேலும் பிணமாக கிடந்தது அரவிந்தன் தான் என்பதையும் உறுதி செய்தனர்.  பின்னர் அரவிந்தனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர் மீன்பிடிப்பதற்காக வந்தபோது, ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story