கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1129 வழக்குகளில் ரூ10 கோடிக்கு சமரச தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1129 வழக்குகளில் ரூ10 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,129 வழக்குகளில் ரூ.10 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி தலைமை தாங்கினார். விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி வி.ஆர். லதா, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர்.விஜயகுமாரி, சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.வி.மணி, தலைமை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பி.வேல்முருகன், சிறப்பு கூடுதல் சார்பு நீதிபதி எஸ். ராஜமகேஷ், கூடுதல் சார்பு நீதிபதி குமாரவர்மன் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரூ.10 கோடிக்கு சமரச தீர்வு
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு 6 ஆயிரத்து 347 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 1,129 வழக்குகளில் ரூ.10 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 700-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story