ஊத்தங்கரை அருகே லாரி மோதி சரக்கு வாகனம் தீப்பிடித்தது டிரைவர் உடல் கருகி பலி


ஊத்தங்கரை அருகே லாரி மோதி சரக்கு வாகனம் தீப்பிடித்தது டிரைவர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 12 March 2022 10:49 PM IST (Updated: 12 March 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் சரக்கு வாகனம் தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி பலியானார்.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் சரக்கு வாகனம் தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி பலியானார்.
சரக்கு வாகனம் 
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள வெலகல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அமீர்பாஷா. இவரது மகன் பாசில் (வயது 26). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் சரக்கு வாகனத்தில் ஓசூரில் இருந்து கடலூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். ஊத்தங்கரை அருகே மகனூர்பட்டி ஜே.ஜே.நகர்  பகுதியில் சென்ற போது, சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு தர்பூசணி லோடு ஏற்றி வந்த லாரி சரக்கு வாகனம் மீது மோதியது.
டிரைவர் பலி 
இதில் மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் சரக்கு வாகன டிரைவர் பாசில் உடல் கருகி பலியாகி விட்டார்.
இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதைத் தொடர்ந்து பாசிலின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்தது. அதே போல தர்பூசணி ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.
புதிய வாகனம் 
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் புதிய சரக்கு வாகனத்தை டெலிவரி செய்வதற்காக பாசில் கடலூருக்கு ஓட்டிச் சென்ற போது விபத்து நடந்தது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story