அரசின் சாதனைக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர்; உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு


அரசின் சாதனைக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர்; உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 12 March 2022 10:51 PM IST (Updated: 12 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 9 மாதங்களில் தமிழக அரசு செய்த சாதனைக்கு, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்று ராணிப்பேட்டை அருகே நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.

ராணிப்பேட்டை

கடந்த 9 மாதங்களில் தமிழக அரசு செய்த சாதனைக்கு, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்று ராணிப்பேட்டை அருகே நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள ஜி.கே. உலகப்பள்ளியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளி நலத்துறை மற்றும் ஜி.கே.உலகப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் 170 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 5-ம் வகுப்பு முதல் பட்டயம், பொறியியல் வரை படித்த வேலை தேடுவோர் 13,869 ஆண்களும், 12,772 பெண்களும், 523 மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். இதில் 4,022 பேர் தகுதிகளின் அடிப்படையில் உடனடியாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 186 பேர் மாற்றுத் திறனாளிகள். 

பணி நியமன ஆணைகள்

முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி முகாம் அரங்கில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான காந்தி தலைமை தாங்கினார். 

மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம் வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர் அமைச்சர் காந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர். 

இன்றைக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தபோதிலும், அதையெல்லாம் ரத்து செய்து விட்டு இங்கு வந்து கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் அமைச்சர் காந்தியின் அன்பு வேண்டுகோள்தான். 

தமிழக அரசின் சாதனை

இங்கு நடைபெறும் 35-வது வேலை வாய்ப்பு முகாம், மற்ற முகாம்களை விட மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.  இளைஞர்கள், மகளிர்கள் வாழ்க்கை மேம்பட தமிழக முதல்-அமைச்சர் உறுதியேற்று இதுபோன்ற முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மகளிர் வேலையை பெற்று பயனடைந்துள்ளனர்.

கடந்த 9 மாதங்களில் தமிழக அரசு செய்த சாதனைக்கு, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றியை தேடி தந்துள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான். ஒரு நாளைக்கு சுமார் 19 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைக்கிறார். 

பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு எப்போதும் இளைஞர்கள், மகளிர் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், ஜெகத்ரட்சகன் எம்.பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஜி.கே.உலகப்பள்ளி இயக்குனரும், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளருமான வினோத் காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இதில் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, தொழிலதிபர் ஏ.வி.சாரதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஜெகதீசன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாற்றுத் திறனாளி அலுவலர் சரவணக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் சேஷா வெங்கட், வடிவேலு உள்ளிட்ட ஒன்றியக்குழு தலைவர்களும், சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், ஹரிணி தில்லை உள்ளிட்ட நகரமன்ற தலைவர்களும், ஏ.கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பேரூராட்சி மன்றத் தலைவர்களும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.

Next Story