நாமக்கல் உழவர் சந்தையில் பெண் விவசாயிக்கு கடை ஒதுக்காததால் காய்கறிகளை தரையில் கொட்டி வாக்குவாதம்
நாமக்கல் உழவர் சந்தையில் கடை ஒதுக்காததால் காய்கறிகளை தரையில் கொட்டி பெண் விவசாயி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணகி (வயது 54). இவர் தனது தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய், வெண்டை, மிளகாய் போன்றவற்றை நாமக்கல் உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் தினசரி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்யவிடாமல் உழவர்சந்தை அலுவலர்கள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கண்ணகி தனது மகனுடன் உழவர் சந்தைக்கு கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த உழவர் சந்தை அலுவலர்கள், அவருக்கு கடை ஒதுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தான் கொண்டு வந்த காய்கறிகளை கீழே கொட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சொந்த தோட்டத்தில் இருந்து கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்? என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து கண்ணகி தோட்டத்துக்கு உழவர் சந்தை அலுவலர்கள் உடனடியாக ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்கு காய்கறிகள் விளைவிக்கப்படுவதும், சந்தையில் இருந்து வாங்கி வருவதாக வந்த புகார் உண்மைக்கு மாறானது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவருக்கு உழவர் சந்தையில் அலுவலர்கள் கடை ஒதுக்கி கொடுத்தனர்.
Related Tags :
Next Story