நீர்பழனி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நீர்பழனி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஆவூர்:
இலுப்பூர் கல்வி மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட படைப்புகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மு.பி.மணி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், செயற்கை எரிமலை, விண்ணில் ராக்கெட் ஏவுதல், மருத்துவ குணம் கொண்ட இயற்கை மூலிகை உணவுகள், மழை வருவதை தெரியப்படுத்தும் கருவி உள்பட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை அவ்வையார்பட்டி, நீர்பழனி, காரப்பட்டு, நடுப்பட்டி, நரியப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனியப்பன் கண்காட்சி குறித்து கூறுகையில், மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும், புதிய ஆராய்ச்சிகளை உருவாக்கும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக பள்ளியின் அறிவியல் ஆசிரியை சுந்தரவடிவு அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில், அறிவியல் ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசியா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story