விபத்துகளுக்கு வித்திடும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்
சாலைதோறும் மரண பள்ளங்கள், மண்மேடுகள் உள்ளதால் விபத்துகளுக்கு வித்திடும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி.... இத்திட்டத்தின் நோக்கம் என்பது மேலைநாடுகளுக்கு இணையான கட்டுமானங்கள், உள் கட்டமைப்புகள், தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவது மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கூடுதல் வசதிகளை செய்து தருவதே ஆகும்.
பல கோடி மதிப்பில் திட்டங்கள்
மத்திய அரசின் நிதியில் மேற்கொள்ளப்படும் இத்திட்டமானது திருப்பூர் மாநகரிலும் செயல்படுத்தப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் நிறைவடையும் முன்பே பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி இழப்புகளை சந்தித்து வரும் சூழல் நிலவுகிறது.
விபத்தில் சிக்குகின்றனர்
திருப்பூரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணி, கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ஆகியவைகளுக்காக பள்ளங்கள், குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடையாமல் நீண்ட காலமாக அப்படியே கிடக்கிறது. மாநகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் இவ்வாறு குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாத பள்ளங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த பள்ளங்களால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பள்ளங்கள், குழிகள் அருகில் பெரிய, பெரிய கற்கள், மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை அடையாளத்துக்காக வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் பொருட்களே அதிக அளவில் விபத்துக்கு காரணமாகவும் அமைகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் மாநகரில் இல்லாததால் இருள் சூழ்ந்த ரோடுகளில் இதுபோன்ற மிகப்பெரிய பள்ளங்கள், குழிகள், அதில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு ஏற்படும் விபத்துக்களில் பொதுமக்கள் பெரும் இழப்புகளை சந்திக்கின்றனர்.
விபத்தில் சிக்கும் அபாயம்
தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி முன்பு பெரிய பெரிய கற்களை சாலையின் நடுவே உள்ள பிரமாண்ட பள்ளத்தில் போட்டு வைத்துள்ளனர். இரவு நேரங்களில் போதிய மின் விளக்கு வசதி இல்லாத இந்த சாலையின் நடுவே இவ்வாறு கற்கள் வைக்கப்பட்டுள்ளதால் 2 சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கனரக வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. காங்கேயம் ரோடு புதூர் பிரிவு அருகே சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடையின் ஆள் இறங்கு குழியின் மூடி திறந்த நிலையிலும் அதன் மேற்பகுதி சேதமடைந்தும் காட்சியளிக்கிறது. இதனால் வேகமாக வந்து திரும்பும் வாகனங்கள் இந்த இடத்தில் விபத்தில் சிக்குகின்றன.
மேலும், மாநகரின் பல பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக சாலைகள், குடிநீர் குழாய் இணைப்புகள், கழிவுநீர், பாதாள சாக்கடை உள்ளிட்டவைகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளைவு பகுதியில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் தரமின்றி அமைக்கப்பட்டதால் அடிக்கடி அங்கு குழாய் சேதமடைகிறது. இதனால் குடிநீர் வீணாவதோடு, சாலையும் சேதமடைகிறது. ஆண்டுக் கணக்காகியும் இங்குள்ள இந்த பள்ளத்தை சீரமைப்பதில் மெத்தனம் காட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
வாகன ஓட்டிகள் சிரமம்
அதேபோல, ஈஸ்வரன் கோவில் நொய்யல் ஆற்று பாலம் அருகில் கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் சாலையை விட சுமார் 5 அடி உயரத்துக்கும் அதிகமாக கட்டப்பட்டுள்ளது. இதில் சீராக மண் கொட்டப்படாமல் உள்ளதால் வாகனங்கள் இந்த 5 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் இந்த பள்ளத்தை அடையாளப்படுத்த கற்கள் வைத்துள்ளனர்.ராயபுரம் செல்லும் சாலையில் நஞ்சப்பா பள்ளி அருகே சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை இறங்கு குழியின் மூடி திறந்து கிடக்கிறது. அருகில் பல அடி ஆழத்தில் தோண்டப்பட்ட கழிவுநீர் தொட்டியும் முறையாக மூடப்படவில்லை. போதிய தடுப்புகள் வைக்கப்படாமலும் உள்ளன. இப்பகுதியில் 3 பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அப்பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி என்றால், கண்ணாடி போன்ற சாலை, அருவி நீர் போன்ற சுவையான குடிநீர், தங்கு தடையின்றி செல்லும் கழிவுநீர் கால்வாய், குப்பைகள் தேங்காத வீதி, தடையற்ற மின்சாரம், அதிநவீன தொழில்நுட்பம், வானுயர பிரமாண்ட கட்டிடங்கள் என்று பெரும் வளர்ச்சியை திருப்பூர் மாநகரம் எட்டும் என எதிர்பார்த்திருந்த மக்கள் திட்ட பணிகள் முடிவடையும் முன்பே மேற்கண்ட பணிகளால் விபத்தில் சிக்கி பெரும் இழப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்காணிக்க வேண்டும்
எனவே இனியாவது இப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளையும், பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள கவுன்சிலர்கள் மற்றும் மேயர் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டு மக்களின் நலன் காக்க தங்கள் பகுதியில் நடக்கும் திட்டப்பணிகளால் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related Tags :
Next Story