வாகனம் மோதி பேரூராட்சி பெண் ஊழியர் பலி
ஆரல்வாய்மொழி அருகே ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.
பேரூராட்சி ஊழியர்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி தெற்கு ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் பகவதி பெருமாள். இவருடைய மனைவி விஜயா (வயது 40). இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
தினமும் விஜயா கணவருடன் ஸ்கூட்டரில் ஆரல்வாய்மொழிக்கு வருவதும், பிறகு அவர் பஸ்சில் ஏறி வள்ளியூருக்கு செல்வது வழக்கமாம்.
வாகனம் மோதியது
அதேபோல் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர் மாலையில் பஸ் ஏறி ஆரல்வாய்மொழியில் வந்திறங்கினார்.
அதை தொடர்ந்து அங்கு தயாராக இருந்த கணவர் பகவதி பெருமாளுடன் ஸ்கூட்டரில் விஜயா பின்னால் அமர்ந்து சென்றார். செண்பகராமன்புதூர் அருகே சோழபுரம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பகவதி பெருமாளின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
பலி
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேரேக்கால்புதூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை விஜயா பரிதாபமாக இறந்தார். பகவதி பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story