தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 12:05 AM IST (Updated: 13 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்களால் தொல்லை 
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராம அண்ணாநகர் பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நேற்று மாலையில் பள்ளி மாணவர்கள் இருவரை சுற்றித் திரிந்த நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே சாலைகளில்  சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் ஓடியது. ஆனால் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி செய்து தரப்படாததால் தற்போது ஆற்றில் குப்பைக்கூளங்களுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம்  வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீர் செல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தின் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை கடித்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை. 

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கரூர் மாவட்டம் ஈரோடு சாலையில் உள்ள ஆத்தூர் பிரிவு சாலை சந்திப்பு பகுதியில் ஏராமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகாரமாகும் குப்பைகளை அப்பகுதி மக்கள் சாலையோரம் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சாலையில் வாகனங்கள் செல்லும்போது குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள் சாலையில் பறந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் தொட்டி 
திருச்சி மாவட்டத்தில் பெயர் பெற்ற ஆன்மிக தலமான சமயபுரம்  மாரியம்மன்  கோவில் செல்வதற்கு பக்தர்கள் சென்னை புறவழிச் சாலையில் புறநகர் பஸ்களில் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். திருச்சி மார்க்கமாகவும், சென்னை மார்க்கமாகவும் 2 சமயபுரம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பஸ் நிறுத்தங்களில் பக்தர்கள் தாகம் தணிக்க குடிநீர் தொட்டி இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் எப்போதுமே இருப்பதில்லை. இந்த குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இன்றி உள்ளதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சமயபுரம், திருச்சி. 

சாலையோரத்தில் பெரிய பள்ளம் 
 திருச்சி-கரூர் சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அல்லுர் அருகே சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனை சரிசெய்யாததால் சாலையின்  இருபுறமும் சாலைகளை கடந்து செல்லும்போது ஓரமாக சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அய்யாரப்பன், திருச்சி. 

தீ மூட்டப்படும் குப்பைகள் 
திருச்சி இ.பி.காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி தீ மூட்டுகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டு மாசு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இ.பி.காலனி, திருச்சி. 

தெருநாய்களால் தொல்லை 
திருச்சி செங்குளம் காலனி அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக சாலையில் நின்றுகொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பெரிதும் பயமாக உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தனபாலன்,  செங்குளம் காலனி, திருச்சி. 


Next Story