‘இலங்கை மக்களின் உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’-கச்சத்தீவு சென்று வந்த பக்தர்கள் பேட்டி
இலங்கை மக்களின் உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கச்சத்தீவு சென்று திரும்பிய பக்தர்கள் கூறினார்கள்.
ராமேசுவரம்,
இலங்கை மக்களின் உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கச்சத்தீவு சென்று திரும்பிய பக்தர்கள் கூறினார்கள்.
மகிழ்ச்சி அளிக்கிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பிய சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ரபேக்கா என்ற பெண் கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் முதல்முறையாக இந்த ஆண்டு கலந்து கொண்டேன். அதிலும் மிகக் குறைவான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் நானும் ஒரு பக்தராக கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கச்சத்தீவில் நடந்த இரண்டு நாள் திருவிழாவில் இருநாட்டு மக்களோடு கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தது, இலங்கை கடற்படையினர் வரவேற்பு, இலங்கை மக்களின் உபசரிப்பு, அவர்கள் கொடுத்த உணவு என அனைத்துமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியகாலின்ஸ் கூறியதாவது:-
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக செல்ல முடியவில்லை. இதுவரை மூன்று முறை சென்று வந்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டு திருவிழாவில் இரு நாட்டு பக்தர்களும் மிக குறைவாக இருந்ததால் திருவிழா எதிர்பார்த்த அளவுக்கு மிக சிறப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை கடற்படையின் வரவேற்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைகள் இல்லை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஆண்டர்சன் கூறியதாவது:-
வழக்கமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். திருவிழாவின்போது இலங்கையிலிருந்து வரும் தமிழ் மக்கள் ஏராளமான கடைகள் அமைத்து ராணி சோப், கொழும்பு லக்ஸ், தூள் தேயிலை பாக்கெட் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்வார்கள்.ஆனால் இந்த முறை இரு நாடுகளில் இருந்தும் மொத்தம் 200க்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு கடை கூட அமைக்கப்படவில்லை. இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் குறைவு என்பதால் கூட்ட நெருக்கடி இல்லாமல் அந்தோணியாரை வழிபட்டோம். இலங்கை மக்களின் உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story