தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 13 March 2022 12:12 AM IST (Updated: 13 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் தொட்டி 
திருச்சி மாவட்டத்தில் பெயர் பெற்ற ஆன்மிக தலமான சமயபுரம்  மாரியம்மன்  கோவில் செல்வதற்கு பக்தர்கள் சென்னை புறவழிச் சாலையில் புறநகர் பஸ்களில் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். திருச்சி மார்க்கமாகவும், சென்னை மார்க்கமாகவும் 2 சமயபுரம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பஸ் நிறுத்தங்களில் பக்தர்கள் தாகம் தணிக்க குடிநீர் தொட்டி இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் எப்போதுமே இருப்பதில்லை. இந்த குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இன்றி உள்ளதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சமயபுரம், திருச்சி. 

சாலையோரத்தில் பெரிய பள்ளம் 
 திருச்சி-கரூர் சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அல்லுர் அருகே சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனை சரிசெய்யாததால் சாலையின்  இருபுறமும் சாலைகளை கடந்து செல்லும்போது ஓரமாக சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அய்யாரப்பன், திருச்சி. 

தீ மூட்டப்படும் குப்பைகள் 
திருச்சி இ.பி.காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி தீ மூட்டுகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டு மாசு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இ.பி.காலனி, திருச்சி. 

தெருநாய்களால் தொல்லை 
திருச்சி செங்குளம் காலனி அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக சாலையில் நின்றுகொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பெரிதும் பயமாக உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தனபாலன்,  செங்குளம் காலனி, திருச்சி. 


Next Story