கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில்   பங்குனி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 13 March 2022 12:34 AM IST (Updated: 13 March 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

காளையார்கோவில், 

  கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் 
 பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

பங்குனி திருவிழா

காளையார்கோவில் அருகே உள்ளது கொல்லங்குடி. இங்கு அரியாகுறிச்சி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை 7.15 மணி முதல் 8.15 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தேரோட்டம்

வருகிற 20-ந்தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந்தேதி காலை 9.15 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் 22-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story