சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 13 March 2022 12:49 AM IST (Updated: 13 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று இரவே குவிய தொடங்கினர்.

சமயபுரம், மார்ச்.13-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று இரவே குவிய தொடங்கினர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தஆண்டு பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டு உள்ளதால் இந்த கோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆனசுயம்புவடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும்தன்னுள்அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு ஆகும்.
நவக்கிரகதோஷம் நீங்கும்
அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகணகாலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.
மேலும், இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றுகள் உள்ளது. தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவஅம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம்கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரியகாட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.
28 நாட்கள் அம்மன் பச்சைபட்டினி விரதம்
மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம்நீங்கவும், உலகநன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல கவுபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்புஆகும்.
பக்தர்கள் குவிந்தனர்
 இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா இன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. பூச்சொரிதல் விழா தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று இரவு முதல் பக்தர்கள் சமயபுரத்தில் குவிய தொடங்கினர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story