ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலி


ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலி
x
தினத்தந்தி 13 March 2022 12:54 AM IST (Updated: 13 March 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலியானார்

மதுரை, 
மதுரை அருகே சக்குடியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலியானார். 96 பேர் காயம் அடைந்தனர்.
சக்குடி ஜல்லிக்கட்டு
மதுரை சிலைமான் அருகே சக்குடியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக அங்குள்ள முப்பிலி சுவாமி கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் நேற்று காலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 
பின்னர் போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், கோட்டாட்சியர் பிர்தவுஸ்பாத்திமா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 
அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் சீறிவந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
அடங்காத காளைகளுக்கும், அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச்சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. 1200 காளைகள் முன்பதிவுசெய்திருந்த நிலையில் 928 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மீதமுள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 700 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 
ஏராளமானோர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.
ஒருவர் பலி-96 பேர் காயம்
 பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 96 பேர் காளைகள் முட்டியதில் காயம் அடைந்தனர். அவர்களில் 18 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 42) என்பவர், ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் ஓடி நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு காளை அவரை முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story