பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவில் அருகே பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவி
நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசீலி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகனும், ஜெரோஷினி (17) என்ற மகளும் இருந்தனர். ஜெரோஷினி நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
ஜெரோஷினி தினமும் பள்ளிக்கூட வாகனத்தில் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
தூக்கில் தொங்கினார்
நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஜெரோஷினி மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை தாயார் ஜெயசீலி அருகில் உள்ள ஆலயத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஜெரோஷினி, தான் களைப்பாக உள்ளதால் ஆலயத்துக்கு வரவில்லை என்றும், மாடி அறையில் தூங்க செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெயசீலி மட்டும் ஆலயத்துக்கு சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மாடியில் உள்ள அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், அழைத்தும் ஜெரோஷினி திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு பள்ளி சீருடையில் ஜெரோஷினி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
சாவு
பிறகு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய ஜெரோஷினியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெரோஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சோகம்
மேலும் இதுகுறித்து ஜெயசீலி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெரோஷினி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கூட மாணவி சீருடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story