மக்கள் நீதிமன்றத்தில் 614 வழக்குகளுக்கு சமரச தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 614 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 614 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும் மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரச குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதிமான சுமதி சாய்பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, குடும்பநல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி பாபுலால், மகிளா நீதிமன்ற நீதிபதி சரத் ராஜ், மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், சார்பு நீதிபதி சுந்தர்ராஜ், சிறப்பு நீதிபதி உதய வேலவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் நீதிபதி பாரததேவி மற்றும் வக்கீல்கள் வழக்குகளை விசாரித்தனர்.
614 வழக்குகளுக்கு தீர்வு
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 69 குற்றவியல் வழக்குகளும், 211 காசோலை மோசடி வழக்குகள், 184 வங்கிக்கடன் வழக்குகளும், 78 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், 67 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 225 சிவில் வழக்குகளும் 629 குற்றவியல் வழக்குகளும் சேர்த்து மொத்தம் 1,463 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதில் 518 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 2 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரத்து 182 ரூபாய், வழக்காடிகளுக்கு கிடைத்தது.
இதுபோல வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 1,614 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.இதில் 96 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் 68 லட்சத்து 31 ஆயிரத்து 172 ரூபாய் வங்கிகளுக்கு கிடைத்தது. நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 614 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 3 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 354 ரூபாய் பயனாளிகளுக்கு கிடைத்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story