மாநகரில் போலீசார் ரோந்து செல்வதை கண்காணிக்க புதிய வசதி


மாநகரில் போலீசார் ரோந்து செல்வதை கண்காணிக்க புதிய வசதி
x
தினத்தந்தி 13 March 2022 1:30 AM IST (Updated: 13 March 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

மாநகரில் போலீசார் ரோந்து செல்வதை கண்காணிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது

மதுரை, 
மதுரை மாநகரில் போலீசார் ரோந்து செல்வதை கண்காணிக்கும் வகையில் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
ரோந்து பணி
மதுரை மாநகரில் அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் கடைகளில் கையெழுத்து நோட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் ரோந்து செல்லும் போலீசார் பணிக்கு வந்தவுடன் கையெழுத்திட வேண்டும். இந்த நோட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் வாரம் ஒருமுறை ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கிடையே ரோந்து செல்வதற்கான புத்தகத்தில் சிலர் முன்கூட்டியே கையெழுத்து போடுவதாக புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து, கமிஷனர் அலுவலகம் மூலம் கியூ.ஆர்.கோடு எண்ணுடன் கூடிய பிரத்தியேக ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய பகுதியில் 60 இடங்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
600 இடங்களில்
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், “மாநகரில் போலீசார் ரோந்து செல்கின்றனரா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக நவீன அம்சங்களுடன் பிரத்தியேக ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மாநகரில் உள்ள 25 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 600 இடங்களில் ஒட்டப்படுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ரோந்து செல்லும் போலீசார் அந்தந்த பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை, செல்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் எத்தனை மணிக்கு அங்கு வந்தார்? என்பது பற்றிய விவரம் பதிவாகும். இதனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மட்டுமின்றி உதவி கமிஷனர், துணை கமிஷனர், கமிஷனர் என அனைவரும் நேரடியாக பார்த்து உறுதி செய்யமுடியும். இதன் மூலம் தவறுகள் நடக்காத வண்ணம் கூடுதலாக கண்காணிக்க முடியும் என்றனர்.

Next Story