மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1609 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1609 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 March 2022 1:38 AM IST (Updated: 13 March 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1609 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ.10½ கோடி வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1609 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ.10½ கோடி வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் தஞ்சை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் வழிகாட்டுதலின் படியும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) நேற்று நடைபெற்றது.
தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தொடங்கிவைத்தார். மக்கள் நீதிமன்ற அமர்வுகளில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிபதி ஜெயசிங், விரைவு நீதிமன்ற நீதிபதி முருகேசன், ஜூடீசியல் மாஜிஸ்திரேட் பாரதி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.6 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 242-க்கு தீர்வு காணப்பட்டது.
சிவில், குடும்ப வழக்குகள்
மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, கூடுதல் சார்பு நீதிபதி முருகன், நீதிபதி மோசஸ்ஜெபசிங் ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் சிவில் வழக்குகள், காசோலை வழக்குகளில் ரூ.1 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரத்து 880-க்கு தீர்வு காணப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி சரவணகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அனிதா கிறிஸ்டி, கூடுதல் உரிமையியல் நீதிபதி முகமது அலி ஆகியோர் கொண்ட 3-வது அமர்வில் குடும்ப நல வழக்குகளில் ரூ.15 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. வங்கி வாராக்கடன் வழக்கில் ரூ.2 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 327-க்கு தீர்வு காணப்பட்டது.
1,609 வழக்குகளுக்கு தீர்வு
இதே போல் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளில் நடந்த வழக்குகள் என மாவட்டத்தில் மொத்தம் 1,609 வழக்குகளுக்கு ரூ.10 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 449-க்கு தீர்வு காணப்பட்டது.
தஞ்சையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட வக்கீல் சங்க செயலாளர் அமர்சிங் மற்றும் வக்கீல்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர். இதில் 7 சட்டக்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு அதனை தேசிய மக்கள் நீதிமன்ற செயலியிலும் பதிவேற்றம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி சுதா மற்றும் நிர்வாக அலுவலர்கள், சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Next Story