போக்சோ சட்டத்தில் தந்தையுடன் சிறுவன் கைது
மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:
மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
மாணவி கடத்தப்பட்டதாக புகார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியான 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக அந்த மாணவியின் தந்தை பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோவையில் மீட்பு
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவி, சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை ஆகிய 3 பேரும் கோவையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் தஞ்சைக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார், அவர்களை தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர், விசாரணை நடத்தியபோது, சிறுமியை சிறுவனும், அவனது தந்தையும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
போக்சோவில் கைது
இதைத்தொடர்ந்து சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story