செல்லிக்குறிச்சி ஏரி ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அவலம்


செல்லிக்குறிச்சி ஏரி ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அவலம்
x
தினத்தந்தி 13 March 2022 1:47 AM IST (Updated: 13 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே உள்ள செல்லிக்குறிச்சி ஏரி ஓரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடும் அவல நிலை உள்ளது. எனவே பாசன ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அருகே உள்ள செல்லிக்குறிச்சி ஏரி ஓரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடும் அவல நிலை உள்ளது. எனவே பாசன ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செல்லிக்குறிச்சி ஏரி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது செல்லிக்குறிச்சி ஏரி. பட்டுக்கோட்டை கடைமடைப்பகுதியிலேயே இது மிகப்பெரிய ஏரியாகும். 
புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் 280 ஏக்கரும், பழஞ்சூர் ஊராட்சியில் 38 ஏக்கரும், அணைக்காடு ஊராட்சியில் 18 ஏக்கரும் என  மொத்தம் 336 ஏக்கர் அளவுக்கு பரந்த நிலையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
கடல் போன்று காட்சி அளிக்கும்
 
அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் புதுக்கோட்டை உள்ளூரில் இருந்து சேண்டாக்கோட்டை வரை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டை ஒட்டியே உள்ளதால் இந்த ஏரியில் தண்ணீர் முழுக்கொள்ளளவை எட்டும் போது பார்ப்பதற்கு ஒரு கடலைப்போன்று காணப்படும். 
ஏரி, முழுக்கொள்ளவையும் எட்டினால் வாய்க்கால்களின் மூலம் களிச்சியம்மன் ஏரி, மழவேனிற்ஏரி, செட்டி ஏரி, சிப்பிமுடிச்சான் ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு இதன்மூலம் இப்பகுதியில் உள்ள புதுக்கோட்டை உள்ளூர், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, அணைக்காடு, பழஞ்சூர், மழவேனிற்காடு, தொக்காலிக்காடு மற்றும் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். 
கழிவுகள் கொட்டப்படுகிறது
இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக காட்சியளித்தது. இது விவசாயிகளை மட்டுமல்லாமல் அனைவரையும் வேதனையடைச்செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர் மழையினால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டி தண்ணீர் நிரம்பி கடல் போல் அலைகளுடன் காட்சியளிக்கிறது. 
இந்த நிலையில் மாளியக்காடு முதல் சேண்டாக்கோட்டை வரை பட்டுக்கோட்டை மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஏரி ஓரங்களில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. 
தண்ணீர் மாசுபடும் அவலம்
இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், ஏரியில் உள்ள ஒட்டுமொத்த தண்ணீரும் மாசுபடும் அவல நிலை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஏரியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு இனிமேலும் ஏரி ஓரங்களில் கழிவுகள் கொட்டாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றி எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story