குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் நாளை முதல் வழங்க ஏற்பாடு
குமரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரைகள்
தேசிய குடற்புழு நீக்க தினம் நாளை (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால் ரத்தசோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இந்த குறைபாடுகளை களைவதற்கு ஆண்டுக்கு இருமுறை குடற்புழுநீக்க மாத்திரை கொடுக்க வேண்டும். மேலும் கை கழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.
இந்த ஆண்டு நாளை முதல் 21-ந் தேதி வரை வரை திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குமரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் 30 வயது வரையுள்ள பெண்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டாசோல் மாத்திரை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது உள்ள பெண்கள் மற்றும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாத்திரை வழங்கப்படுகிறது.
6,94,498 பேர் பயன்
மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியிலும் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 6,94,498 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் ஏற்படாது
இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் தினமான நாளை முதல் 21-ந் தேதி வரையிலான தினங்களில் உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு 27-ந் தேதி மாத்திரை வழங்கப்படும்.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி அவர்களது நல்வாழ்விற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story