தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 802 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 802 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 March 2022 2:55 AM IST (Updated: 13 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 802 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்:

தேசிய மக்கள் நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கினார்.
இதில் குடும்ப நல நீதிபதி தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா, சார்பு நீதிபதி ஷகிலா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி, நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா, முனிக்குமார், குன்னம் தாலுகாவில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சிவகாமசுந்தரி ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.
802 வழக்குகள்
இதில் 63 வங்கி வழக்குகளில் ரூ.55 லட்சத்து 2 ஆயிரத்து 950-க்கும், 19 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரத்து 648-க்கும், 8 சிவில் வழக்குகள் ரூ.33 லட்சத்து 80 ஆயிரத்துக்கும், 711 சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 400-க்கும், 1 குடும்ப நல வழக்கு என மொத்தம் 802 வழக்குகளுக்கு, ரூ.2 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரத்து 998-க்கு தீர்வு காணப்பட்டது.
தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள்-மனுதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story