நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ெவளியான தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு


நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ெவளியான தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 March 2022 2:56 AM IST (Updated: 13 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்ததாக குற்றம்சாட்டி, அதற்கு அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் நடித்த திரைப்படங்களை திரையிட விடமாட்டோம் என்று பா.ம.க. சார்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாக இருந்தது. ஆனால் அந்த படத்தை திரையிடக்கூடாது என்று கூறி பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் சார்பாக தியேட்டர் உரிமையாளர்களிடம், மனு அளித்தனர். இதனால் அந்த படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியும், அந்த படத்தை தியேட்டரில் திரையிடவில்லை. இதைத்தொடர்ந்து பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன், தியேட்டர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த படத்தை திரையிட அவர்கள் சம்மதித்ததோடு, நடிகர் சூர்யாவின் போக்கிற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததாக தெரிகிறது.
இது குறித்து பா.ம.க.வினர் உள்ளிட்டோர் கூறுகையில்,, எங்களுக்கு தியேட்டர் உரிமையாளர் எதிரி அல்ல. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே நோக்கம். மன்னிப்பு கேட்காத சூர்யாவின் திரைப்படம் இனி எந்த தியேட்டரில் ஓடினாலும் இதேபோன்று எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட மாட்டோம், என்றனர். மேலும் தாங்கள் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்டு, தியேட்டர் உரிமையாளர்கள் 2 நாட்கள் படத்தை திரையிடாமல் இருந்ததற்கு தங்களது நன்றிைய தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். 
இதைத்தொடர்ந்து அந்த தியேட்டரில் படம் திரையிடப்பட்டது. ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story