கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடத்தூர்
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுப்பிரமணியசாமி கோவில்
கோபி பச்சைமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பால், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் கோவிலின் முன்பு உள்ள கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, சுப்பிரமணிய சாமிக்கு அரோகரா,’ என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோவிலில் மாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜையும், 5 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும், இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடும் நடைபெற்றது.
பங்குனி உத்திர தேர் திருவிழா
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 17-ந் தேதி பகல் 11 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் சாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சண்முகர் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு சாமிக்கு மகா அபிஷேகமும், திருப்படி பூஜையும் 9 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரமும் நடைபெறுகிறது. இதையடுத்து காவடி, பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்கிறார்கள்.
அன்னதானம்
தேர் திருவிழாவைெயாட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் நடைபெற உள்ளது.
19-ந் தேதி காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும், மதியம் 12 மணி அளவில் சாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா வலம் வரும் நிகழ்ச்சியும், 20-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், தெப்பத் திருவிழா, கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story