மண்ணால் மூடப்பட்ட, 12 கோடி ஆண்டுகள் தொன்மையான கல்மரப்படிமம் மீட்பு
மண்ணால் மூடப்பட்ட, 12 கோடி ஆண்டுகள் தொன்மையான கல்மரப்படிமம் மீட்கப்பட்டது.
குன்னம்:
கல்மரப்படிமம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 8 அடி நீளமுள்ள கல்மர படிமம் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 12 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த கல்மரப்படிமத்தை மீட்டு சாத்தனூரில் உள்ள கல்மரப்பூங்கா வளாகத்தில் உள்ள அருங்காட்சியத்திலோ அல்லது குன்னம் தாலுகா அலுவலகம் அருகில் அருங்காட்சியம் அமைத்தோ பத்திரப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கல்மரம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் கல்மரப்படிமத்தை பாதுகாப்பதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
மீட்கும் பணி
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வேப்பூர் ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை அமைக்கும் பணியின்போது தொன்மையான கல்மரப் படிமம் மீது மண் கொட்டி மூடி சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அரசு உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்காக மண் மூடி புதைக்கப்பட்ட கல்மரப் படிமத்தை மீட்கும் பணி நேற்று மாலை தொடங்கியது.
இதில் குன்னம் தாசில்தார் அனிதா தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு மண்ணை அகற்றி கல்மரப் படிமத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாக்கப்படும்
இதைத்தொடர்ந்து இரவில், அந்த கல்மரப் படிமத்தை சேதாரம் இல்லாமல் மீட்டனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) அந்த கல்மரப் படிமம் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக சேதாரம் அடையாமல் எடுத்துச்செல்லப்பட்டு, குன்னம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து அரசு உத்தரவின்பேரில் கல்மரப் படிமம் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story