‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 3:21 AM IST (Updated: 13 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயன்பாட்டுக்கு வந்த நிழற்கூடம் 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த சூரியகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது அந்த இடத்தில் சிலர் வைக்கோல் வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் பயணிகள் நிழற்கூடம் சுகாதாரமற்று பயன்படுத்த முடியாத நிலையிலும், பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமப்பட்டு வந்ததாகவும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்தி நிழற்கூடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-மணி, சூரியகவுண்டம்பாளையம், நாமக்கல்.
===
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார்சாலை 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சியில் ஜடை மாரியம்மன் கோவிலில் இருந்து கோவிந்தசாமி நகர் வழியாக பாகல்பட்டி-தண்ணீர்தொட்டி இணைப்பு சாலை வரையில் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அவசர காலங்களில் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையில் மோசமாக சாலை காணப்படுகிறது. எனவே இந்த சாலையை மீண்டும் தார்சாலையாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அன்புமணி, செல்லப்பிள்ளைகுட்டை, சேலம்.
==
மீண்டும் சோலார் விளக்குகள் வைக்க வேண்டும்

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி பஸ் நிலையத்தில் சோலார் தெரு விளக்கு, சோலார் சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டது. மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் போது அதை சேதப்படுத்தி அப்புறப்படுத்தி விட்டனர். எனவே  பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சோலார் விளக்கு, சோலார் சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் வைக்க வேண்டும்.

-பிரபு, மகுடஞ்சாவடி, சேலம்.
===
ஆபத்தான டிரான்ஸ்பார்மர் 

சேலம் மாவட்டம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் மெயின் ரோட்டில் பள்ளிவாசல் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் பலமுறை மின்சார கம்பத்தை அகற்றகோரி கோரிக்கை வைத்தும் இன்று வரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலாவுதீன் பாஷா, சூரமங்கலம், சேலம்.
===
குண்டும், குழியுமான சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா வெள்ளையம்பாளையம் அடுத்துள்ள வைகுந்தம் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. குண்டும், குழியுமான இந்த சாலை 4 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை புதுப்பித்து தர முன் வருவார்களா?

-ஜி.லோகாம்பாள், வைகுந்தம், சேலம்.
===

Next Story